Scorecard: | Bangladesh v Sri Lanka |
Player: | ST Jayasuriya |
Event: | Asia Cup 2008 |
DateLine: 1st July 2008
போட்டி: 50 ஓவர்கள் போட்டி (பகலிரவுப் போட்டி)
இடம்: நேஷனல் மைதானம். கராச்சி, பாகிஸ்தான்.
தேதி: 30.06.2008. திங்கள் கிழமை
மோதிய அணிகள்: இலங்கை அணி - வங்கதேச அணி
முடிவு: 158 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி
ஆட்ட நாயகன்: சனத் ஜெயசூர்யா
வணக்கம்
 
பாகிஸ்தானில் நடைபெற்று வரும் ஆசியக்கோப்பை ஒருநாள் போட்டித் தொடரின் சூப்பர் 4 சுற்றில், இன்று கராச்சியில் நடைபெற்ற மூன்றாவது போட்டியில் இலங்கை அணி, வங்கதேசஅணியை 158 ரன்கள் வித்தியாசத்தில் மிகச் சுலபமாக வீழ்த்தியது. இதன் மூலம் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இலங்கை அணி பிரகாசப்படுத்திக் கொண்டது. 
பூவா தலையா வென்ற இலங்கை அணியின் கேப்டன் மஹேல ஜெயவர்தனே முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி சனத் ஜெயசூர்யாவும், குமார் சங்ககாராவும் தொடக்க ஆட்டகாரர்களாக களமிறங்கினர். 
இவர்களிருவரும் இணைந்து வங்கதேச அணியினரின் பந்துவீச்சை மைதானத்தின் நாலாபுறமும் சிதறடித்தனர். அதிலும் குறிப்பாக எதிரணியினரின் பந்துவீச்சை வாணவேடிக்கை காட்டிய சனத் ஜெயசூர்யா 55 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 14 பவுண்டரிகளுடன், ஒரு தினப் போட்டிகளில் தனது 26-வது சதத்தைக் கடந்தார். 
மேலும் இவர் 110 ரன்கள் குவித்தபோது ஒருதினப் போட்டிகளில் 12,500 ரன்களைக் கடந்தார். சிறப்பாக ஆடிய ஜெயசூர்யா 88 பந்துகளில் 6 சிக்ஸர்கள், 16 பவுண்டரிகளுடன் 130 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் 
ஜெயசூர்யாவுடன் விளையாடிக் கொண்டிருந்த சங்ககாராவும் தன் பங்கிற்கு 117 பந்துகளில் 1 சிக்ஸர், 12 பவுண்டரிகளுடன் ஒரு நாள் போட்டிகளில் தனது 10வது சதத்தைக் கடந்தார். இது இத்தொடரில் அவர் அடிக்கும் மூன்றாவது சதமாகும். 
இவர் 128 பந்துகளில் 1 சிக்ஸர், 16 பவுண்டரிகளுடன் 121 ரன்கள் எடுத்திருந்த போது அப்துர் ரசாக் சுழலில் ஸ்டம்புகளைப் பறிகொடுத்தார். இலங்கை அணியின் கேப்டன் மஹேல ஜெயவர்தனே 20 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வீழ்ந்தனர். 
இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 332 ரன்கள் எடுத்தது. 
கடின இலக்கை விரட்டிய வங்கதேச அணி முத்தையா முரளிதரன் சுழலில் சிக்கியது. தொடக்க வீரராக களமிறங்கிய தமீம் இக்பால் 8 ரன்களில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரான நசிமுதீனுடன் வங்கதேச அணியின் கேப்டன் முகமது அஷ்ரபுல் ஜோடி சேர்ந்தார். 
ஆனால் அவரும் நிலைத்து நிற்கவில்லை. 14 ரன்கள் எடுத்த திருப்தியில் மிராண்டோ பந்துவீச்சில் வெளியேறினார். இவரையடுத்து நசிமுதீனுடன் ரகிபுல் ஹசன் ஜோடி சேர்ந்தார். இருவரும் ஓரளவிற்கு இலங்கை அணியினரின் பந்துவீச்சை சமாளித்து ஆடினர். 
சிறப்பாக ஆடிவந்த நசிமுதின் 59 பந்துகளில் 1 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 47 ரன்கள் எடுத்திருந்தபோது ரன்அவுட் முறையில் ஆட்டமிழந்து, 3 ரன்களில் அரைசதம் அடிக்கும் வாய்ப்பை நழுவ விட்டார். 
ரகிபுல் ஹசன் சிறப்பாக ஆடி ஒரு நாள் போட்டிகளில் 4வது அரைசதத்தைக் கடந்தார். அரை சதமடித்தபின் மேலும் இரண்டு ரன்கள் சேர்த்திருந்தபோது முரளிதரன் சுழலில் அவர் வீழ்ந்தார். 
பிறகு வந்த வீரர்களை முரளிதரனும், அஜந்தா மெண்டிஸும் கவனித்துக் கொண்டனர். 
முடிவில் வங்கதேச அணி 38.3 ஓவர்களில் 174 ரன்களுக்கு சுருண்டு படுதோல்வி அடைந்தது. முத்தையா முரளிதரன் அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஜெயசூர்யா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். 
நேற்று 39வது பிறந்தநாளை கொண்டாடிய இலங்கை வீரர் சனத் ஜெயசூர்யா 55 பந்துகளில் 100 ரன்களை தொட்டு, ஒரு நாள் அரங்கில் 6வது அதிகவேக சதத்தை பதிவு செய்தார். மேலும், ஒரு நாள் அரங்கில் 26வது சதம் கடந்த ஜெயசூர்யா, அதிக சதம் கடந்த வீரர்கள் வரிசையில் ஆஸ்திரேலிய கேப்டன் பாண்டிங்குடன் இரண்டாவது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். இந்திய வீரர் சச்சின் தெண்டுல்கர் 42 சதங்களுடன் முதலிடத்தில் இருக்கிறார். 
ஜெயசூர்யா, ஒரு நாள் அரங்கில் 100 ரன்களை எட்டிய இரண்டாவது மூத்த வீரர் (39) என்ற சாதனையும் படைத்தார். முதலிடத்தில் இங்கிலாந்தின் பாய்காட்(39 ஆண்டு 51 நாட்கள்) இருக்கிறார். 
'சூப்பர் 4' பிரிவில் தன்னுடன் மோதிய பாகிஸ்தான், வங்கதேச அணிகளை வெற்றி கண்டுள்ளதால் ஆசியக் கோப்பைக்கான இறுதிப் போட்டியில் நுழையும் வாய்ப்பை இலங்கை அணி பிரகாசப்படுத்திக் கொண்டது. 
நன்றி, வணக்கம்.